கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை
நெல்லையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி பேராசிரியை
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் ஜோசப் (வயது 62). இவருடைய மகன் பெஞ்சமின் டேவிட் சத்யநாதன் (32). இவர் தற்போது சேரன்மாதேவியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பெஞ்சமின் டேவிட் சத்யநாதனின் மனைவி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவருக்கும், எனக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது எனது பெற்றோர் 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம், சீர்வரிசை பொருட்கள், கார் ஆகியவற்றை கொடுத்தனர்.
மாமனார் பாலியல் தொல்லை
எனது கணவர் அப்போது வேளாங்கண்ணியில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வந்தார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே எனது மாமனாரான பாஸ்கரன் ஜோசப், எனக்கு செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து நான் எனது கணவர் மற்றும் மாமியார் சாந்தினியிடம் கூறினேன். ஆனால் அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும் எனது கணவர் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டினார். இதற்கிடையே, மாமனாரின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகியது.
மிரட்டல்
இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது கணவரின் குடும்பத்தினர் எனது நகைகளை என் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். நான் எனது தந்தையுடன் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது கணவருடன் என்னை சேர்த்து வைப்பதற்காக எனது உறவினர்கள் எனது கணவர் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாமனார் மற்றும் மாமியார் சாந்தினி ஆகியோர் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாமனார்-கணவர் கைது
இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரன் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். மேலும், பெஞ்சமின் டேவிட் சத்யநாதனும் கைது செய்யப்பட்டார். சாந்தினியை தேடி வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மற்றும் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.