அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு

திருத்தங்கல் பகுதிகளில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-11-10 20:02 GMT
சிவகாசி, 
சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சிவகாசி மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக என்ஜினீயர் லலிதாமணி செயல்பட்டு வருகிறார். இவரிடம் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சிவகாசி மாநகராட்சி கமிஷனர் லலிதாமணி சக அதிகாரிகளுடன் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகர் பகுதிக்கு சென்றார். அங்கு அடிப்படை வசதி கேட்டு மனு கொடுத்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் ரவிச்சந்திரன்,  ரமேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தி.மு.க. நகர பொறுப்பாளர் உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கூடிய விரைவில் நிறைவேற்றி தருவதாக மாநகராட்சியின் பொறுப்பு கமிஷனர் லலிதாமணி பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்