23 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.62 லட்சம் திருட்டு
பாடாலூரில் 23 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.62 லட்சம் திருட்டு போயின.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). சம்பவத்தன்று தாய்-தந்தை இருவரும் வெளியூர் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வீட்டில் உள்ள ஒரு அறையில் அயர்ந்து தூங்கினார். நேற்று காலை எழுந்து வெளியே வர முயன்றபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.
இதனால், தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். அவர் வந்து கதவை திறந்து விட்டார். அப்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் இருவரும் வீட்டை பார்வையிட்ட போது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், தோடு, ஜிமிக்கி, சங்கிலி உள்ளிட்ட 23 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.62 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தன.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.