திருச்செந்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.

Update: 2021-11-10 19:15 GMT
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 

இந்த ரெயில்கள் மூலம் நெல்லைக்கு கல்லூரி மற்றும் வேலைக்கு ஏராளமானோர் வந்து சென்றனர். இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்செந்தூர்

இந்த நிலையில் நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் நேற்று முதல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ற பெயரில் கூடுதல் கட்டணங்களுடன் இயக்கப்பட்டது.
நேற்று காலை 7-20 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. நெல்லையில் இருந்து அடுத்த ரெயில் நிறுத்தமான பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இறங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட நேரத்தில் ரூ.15 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

செங்கோட்டை ரெயில்

இதேபோல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 6 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இங்கு இருந்து அடுத்த ரெயில் நிறுத்தமான டவுன் ரெயில் நிலையத்தில் இறங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ.45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட நேரத்தில் ரூ.15 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த ரெயில்களுக்கு கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தனர்.
இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து சிறப்பு விரைவு ெரயில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு நெல்லைக்கு வந்தது. திருச்செந்தூரில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.

பயணிகள் கோரிக்கை

இதேபோல் காலை 6.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலையும், நெல்லையில் இருந்து மாலை 6.20 மணிக்கு செங்கோட்டை இயக்கிய பயணிகள் ரெயிலையும் இயக்க வேண்டும்.

இதேபோல் ஏற்கனவே இயக்கப்பட்ட திருச்செந்தூர், கோவை உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயிலையும் உடனே இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்