வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய வாலிபர்
வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய வாலிபர்
போத்தனூர்
வீட்டில் பிள்ளைகள் போன்றே சிலர் நாய்குட்டிகளையும் வளர்த்து பாசம் காட்டுகின்றனர். ஆசைக்கு ஒரு நாய் என்று, தற்போது வீட்டுக்கு ஒரு நாயை வளர்த்து வருகின்றனர். தங்களுடைய எஜமானர்களுக்கு வளர்ப்பு நாய்கள் நிஜமான நண்பர்களாகவே விளங்கும். வீட்டுக் காவலுக்கும் கெட்டிக்காரர்களாக விளங்கும் என்பது தானே உண்மை நிலை.
அப்படித்தான் ஒரு வாலிபரும், தனது வீட்டுக்கு ஒரு நாயை வாங்கி வந்து வளர்த்தார். ஆனால் நாளடைவில் வளர்த்தவருக்கு என்ன ஆச்சுதோ...வளர்த்த நாய்க்கு என்ன ஆச்சுதோ தெரியவில்லை. அந்த நாய் அவரிடம் படாத பாடு பட ஆரம்பித்தது. அது பற்றி பார்க்கலாம்:-
ஆம்...கோவையை அடுத்த சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் சதீஷ். இவர் தனது வளர்ப்பு நாயுடன் தினமும் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். நாயும், அவரும் இணைபிரியாத நண்பர்களாகவே காணப்பட்டனர். இந்த நிலையில் ஒருநாள் அவரது வீட்டுக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அந்த குரலில் ஆவேசம் இல்லை.
அழுகுரலாகவே இருந்தது. இது அக்கம், பக்கத்தினரை சந்தேகப்பட வைத்தது. நாய்க்கு உடம்பு ஏதும் சரியில்லையோ என்று நினைத்தனர். ஒருநாள் சிலர் நாய் அபயக்குரலில் சத்தமிடுவதை பார்த்து அந்த வீட்டுக்கு வெளியே நின்றவாறு எட்டிபார்த்தனர். அப்போது தான் தெரிந்தது. சதீஷ் அந்த நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்திக்கொண்டு இருந்தது. இந்த காட்சியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் அது அவரது நாய், அதனை தூக்கி கொஞ்சவும், தூக்கி வீசமும் அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு என்றே எண்ணினர். ஆனால் அந்த நாய் அடிக்கடி இதுபோன்று துன்புறுத்தப்படுவதை பார்த்து மிகுந்த கவலை அடைந்தனர். இதனை தட்டிக்கேட்கவும் முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் பிரதீப் என்பவர் அங்கு சென்று பார்த்தபோது, அந்த வளர்ப்பு நாயை சதிஷ் அடித்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சதீஷ் தனது வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பிரதீப்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில், சதீஷ் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சதீஷ் தனது வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ைவரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.