வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்போவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்போம்
வேலூர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். செயலாளர் தீனதயாளன், சங்க உறுப்பினர்கள் ஸ்ரீராம், கோபி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் செலவினங்களை முழுமையாக வழங்க வேண்டும். தேர்தல் மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் கொடுத்து விட்டார்கள். ஆனால் 5 மாதங்களுக்கு மேலாகியும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 13,14,27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெற உள்ள தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.