வேலூரில் கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு
வேலூரில் கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
வேலூர்
வேலூரில் கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
வாலிபர் கொலை
வேலூர் பெருமுகை மேலாண்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பாலமுருகன் (வயது 20), மெக்கானிக். கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பாலமுருகனின் நண்பர்களான தோட்டப்பாளையத்தை சேர்ந்த கரியன் என்கிற ஜெகதீஸ்வரன் (19) மற்றும் 17, 18 வயதுடைய 2 வாலிபர்கள் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் பாலமுருகனை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், கிரீன்சர்க்கிள் அருகே ஒரு ஓட்டல் பின்புறம் உள்ள காலி இடத்தில் அமர்ந்து அவர்கள் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், பாலமுருகனை அவர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் சென்றுவிட்டனர். கொலை செய்தவர்களில் ஒருவரின் தங்கையுடனான காதல் விவகாரத்தால் கொலைநடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
உடல் தோண்டி எடுப்பு
மேலும், வேலூரில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சுகுமார் என்பவரின் கொலை வழக்கில் பாலமுருகன் ஒரு குற்றவாளியாக இருந்துள்ளார். பாலமுருகனை கொலை செய்தவர்களுக்கும், சுகுமாருக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. தங்களது நண்பன் கொலை வழக்கில் பாலமுருகனுக்கு தொடர்பு இருந்ததால் அதன் காரணமாகவும் பாலமுருகனை கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலமுருகன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நேற்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு 3 பேரையும் போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் பாலமுருகன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், செந்தில்குமார் மற்றும் போலீசார் வேலூர் தாசில்தார் செந்தில் முன்னிலையில் பாலமுருகன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.