சயனபுரம் ஏரிக்கு செல்லும் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டது
சயனபுரம் ஏரிக்கு செல்லும் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணி
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி குசஸ்தலை ஆற்றில் இருந்து சயனபுரம் பெரிய ஏரிக்கு செல்லும் நீர் வரத்துக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சயனபுரம் ஏரிக்கு நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை, எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான வடிவேல் நேரில் சென்று சயனபுரம் ஏரிக்கு செல்லும் வரத்துக் கால்வாயை பார்வையிட்டார்.
மேலும் கால்வாயில் இருந்த அடைப்பை உடனடியாக சரி செய்ய நெமிலி ஒன்றிய தலைவர் வடிவேல் தனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலமாக கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். தீவிரமாக நடந்து வரும் தூர்வாரும் பணியை உடனிருந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பணியை துரிதமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும், எனக் கூறி குசஸ்தலை ஆற்றுப் பகுதியின் அருகில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரப்பி விவசாயிகள் பயன்பெற துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
ஆய்வின்போது சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முஹம்மது அப்துல் ரகுமான் மற்றும் சங்கர், சரவணன், தினேஷ், நசீர், வேலு, கோவிந்தராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.