நாமக்கல்லில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் அடுத்த போதுப்பட்டியில் உள்ள கே.ஜி.போஸ் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அரசு போக்குவரத்து கழகத்தில் முதுநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மகனான என்ஜினீயர் தினேஷ்பாலுக்கு (வயது 33) திருமணமாகி தீபா என்ற மனைவியும், 1½ வயதில் தான்யா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். தினேஷ்பாலுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வீட்டில் இருந்தவாறே கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாததால் அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக அவருடைய மனைவி தீபா குழந்தையுடன், அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ்பால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர்கள், தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்த தினேஷ்பாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.