21 நாட்களில் 600 இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு
ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக சாதனை முயற்சியாக 21 நாட்களில் 600 இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்கும் பணியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
மழைநீர் சேமிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது. இதனால் குடிநீர், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் உலக சாதனை முயற்சியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 21 நாட்களில் 600 இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி உலக சாதனை முயற்சியாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உலக சாதனை முயற்சி குறித்து கலெக்டர் விசாகன் கூறியதாவது:-
உலக சாதனை முயற்சி
அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை தேக்கி வைத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 600 இடங்களில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த 600 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் 21 நாட்களில் அமைத்து உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணிகள் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இதில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 445 கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் மழைநீரை சேமிக்க 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்படுகிறது.
அதில் தேங்கும் மழைநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், மழைநீர் வடிகால்தொட்டிகளில் சேருவதற்கு வசதி செய்யப்படுகிறது. அதன்மூலம் 2 கோடி லிட்டர் மழைநீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 30-ந்தேதிக்குள் நிறைவுபெறும். இதனால் மழைநீர் வீணாகுவதை தடுத்து குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாம். இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்திலும் சாதனை முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரங்கராஜன், துணை கலெக்டர் விசுவநாதன், உதவி கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.