கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜா கோபால் சுன்கரா, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தாரேஸ் அகமது, கலெக்டர் சமீரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கோவையில் வடகிழக்கு பருவமழை 245 சதவீதம் அதிகமாக பெய்து உள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையம் கோவைக்கு ஆரஞ்ச் நிற அலர்ட் விடுத்து உள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருப்பதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நாளை (இன்று) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மழைச்சேதம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி, மேட்டுப்பாளையம் 11 இடங்கள், வால்பாறை, பேரூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் தலா 3 இடங்கள், ஆனைமலையில் ஒரு இடம் என மொத்தம் 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தவிர, மாநகராட்சி பகுதியில் 65 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 17 பழங்குடியின கிராம மக்களுக்கு 7 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் வெள்ள நிவாரண பணிகள், மீட்பு பணிகளுக்கு என 1,758 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் பகுதியில் தேங்கும் மழைநீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் பாதாள சாக்கடை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த தண்ணீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக சென்று விடும்.
மாவட்டம் முழுவதும் 58 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க 65 நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.