டிப்பர் லாரி மோதி மாணவன் பலி

டிப்பர் லாரி மோதி மாணவன் பலி;

Update: 2021-11-10 17:45 GMT
டிப்பர் லாரி மோதி மாணவன் பலி
போத்தனூர்

கோவையை அடுத்த செட்டிபாளையம் ஓரட்டுகுப்பை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மகேஸ்வரி. அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன்கள் கார்த்திகேயன்  (வயது13), சர்வேஷ் (7). இருவரும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து  வந்தனர். இதில் சர்வேஷ் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கமாக செல்லும் தனியார் பள்ளி வேனில் கார்த்திகேயன், சர்வேஷ் மற்றும் சக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
இறக்கி விட்டார்இந்த நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம்அறிவித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு சர்வேஷ், கார்த்திகேயன்  உள்பட மாணவர்கள் அதே வேனில் வீடுகளுக்கு திரும்பினர்.

வேனில் இருந்த சர்வேஷ், கார்த்திகேயன் ஆகியோர் இறங்கும் தோட்டம் இருக்கும் இடம் வந்தது. ஆனால் டிரைவர் தெரியாமல் அதனை தாண்டி வேனை சிறிது தூரம் ஓட்டிக்கொண்டு சென்று விட்டார். பின்னர்  மீண்டும் டிரைவர் அந்த மாணவர்களை இறக்கி விட வேனை திருப்பிக்கொண்டு அதே இடத்துக்கு வந்தார். 

பின்னர் சர்வேசையும், கார்த்திகேயனையும் வேனில் இருந்து இறக்கி விட்டவாறு, டிரைவர் சாலையை கடந்து  அவர்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். அப்போது  திடீரென சர்வேஷ் சாலையை கடந்து உள்ளார். 

அப்போது  காரசேரி பகுதியில் இருந்து செட்டிபாளையம் நோக்கி  வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி  எதிர்பாராமல் சர்வேஷ் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஷ்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார் சர்வேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் டிப்பர் லாரியை ஓட்டி வந்த பரமேஸ்வரன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விடுமுறை விடப்பட்டதால், பள்ளிக்கு சென்று விட்டு திரும்பியபோது சர்வேஷ் உயிரிழந்த சம்பவம், அவனது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்