கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 600 பஸ்கள் வந்து செல்கின்றன. கடந்த ஆண்டு பஸ்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க ரூ.18 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் 8 மாதங்களாக இந்த கட்டணம் வசூலிக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 2018-2019-ம் ஆண்டில் சுங்க கட்டணம் வசூலிக்க ரூ.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதில் சுமார் ரூ.25 லட்சம் இன்று வரை வசூல் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு செயல்பாடுகளை கண்டித்து மக்கள் உரிமை லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவை சார்பில் ராமநாதயடிகள் தலைமையில் 7 பேர் நேற்று கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் வழியை மறித்து கயிறு கட்டி பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றிய தகவல்அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.