கடலூர் மாவட்டத்தில் கனமழையால் 746 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

கடலூர் மாவட்டத்தை மிரட்டி வரும் கனமழையால் 746 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-10 17:21 GMT
கடலூர், 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தில் காரைக்காலுக்கும், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நேற்று காலை வரை பெய்தது. நேற்று காலை சற்று மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர்-சிதம்பரம் பிரதான சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 

இயல்பு வாழ்க்கை முடங்கியது

மேலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 
தேங்கி நின்ற நீரை பொக்லைன் எந்திரம் மூலமாகவும், மோட்டார் மூலமாகவும் இறைத்து மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். 

விவசாயிகள் அவதி

இதேபோல் பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலைநகர், குப்பநத்தம், புவனகிரி, வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், மே.மாத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அந்த நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தேத்தாம்பட்டு அருகில் சாலையின் வலது புறம் பெலாந்துறை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் மறுகரையில் வசிக்கும் பெண்கள், ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் குடம் சுமந்து செல்கின்றனர். 

746 வீடுகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர தொடர் மழைக்கு குடிசை மற்றும் ஓடு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இவற்றை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து உள்ளனர்.
அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 462 குடிசை வீடுகள் பகுதியாகவும், 37 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன. இது தவிர 78 ஓடு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்து இருந்தன.

நேற்று ஒரே நாளில் 127 குடிசை வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும், 36 ஓடு வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் இடிந்து விழுந்து சேதமானது. இதுவரை மொத்தம் 589 குடிசை வீடுகள் பகுதியாகவும், 42 வீடுகள் முழுமையாகவும், 114 ஓடு வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் என மொத்தம் 746 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. 

கன்றுக்குட்டிகள் செத்தன

மேலும் கடலூர் முதுநகர் அன்னவல்லி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு சொந்தமான 8 மாத கன்றுக்குட்டி, தொண்டமாநத்தத்தை சேர்ந்த தனலட்சுமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் கன்றுக்குட்டிகள் கனமழையால் செத்தன. 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 13 சென்டி மீட்டர் (128.6 மில்லி மீட்டர்) மழை பதிவானது. குறைந்தபட்சமாக தொழுதூரில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 71.12 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மேலும் செய்திகள்