1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
1 லட்சம் ஏக்கர் பயிர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விளை நிலங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. கிளை வாய்க்கால், வடிகால்கள் முழுமையாக தூர்வாராததால் வயல்களில் தேங்கிய நீர் வடிய வழியின்றி உள்ளது.
இதனால் நடவு செய்த இளம் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு செய்த இளம் பயிர்களும் அழுகும் நிலையில் உள்ளது. இந்த கனமழையால் 1 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தங்க வைக்க 241 இடங்கள் தயார்
கனமழையின் காரணமாக இதுவரை 254 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 211 குடிசை வீடுகள் பகுதி சேதமாகும். 7 குடிசை வீடுகள் முழுமையாகவும், 36 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மழையினால் 2 மாடுகள் உயிரிழந்துள்ளன.
ஆறுகளில் கரைகளை கண்காணித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக 28 ஆயிரம் மணல் மூட்டைகள், 1 லட்சம் சாக்குகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களை தங்க வைக்க பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய கூடங்கள், திருமண்டபங்கள் என 241 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது
திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் கிராமத்தில் பத்மா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். மழையினால் திருவாரூர் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதனை ஒன்றியக்குழு தலைவர் தேவா நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மழை அளவு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருத்துறைப்பூண்டி-216, திருவாரூர்-186, மன்னார்குடி-140, நன்னிலம்-134, முத்துப்பேட்டை-134, வலங்கைமான்-123, பாண்டவையாறு தலைப்பு-114, நீடாமங்கலம்-110, குடவாசல்-109.
கனமழையின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.