வெள்ளமீட்பு பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் கோபியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

வெள்ளமீட்பு பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று கோபியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-11-10 15:11 GMT
வெள்ளமீட்பு பணியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று கோபியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
மு.க.ஸ்டாலின் அரசு
கோபியில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஞாயிறு பெய்த கன மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது.
உயர்நீதிமன்றம் கேள்வி
மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது போல் இதற்கு முன் எந்த அரசும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்து வந்தது. அப்போது பல ஆயிரம் ரூபாய் கோடி அளவில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, கால்வாய்களை சீரமைக்க செலவிட்டதாக அ.தி.மு.க. கூறி உள்ளது.
ஆனால் அ.தி.மு.க. அரசிடம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையிலான அமர்வு, சென்னையில் பாதாள சாக்கடை திட்டம், மழை நீர் சேமிப்பு திட்டத்திற்காக செலவிடப்பட்டதாக கூறிய பல ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மோசமான நீர் மேலாண்மை
தியாகராய நகருக்கு மட்டும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிதி என்னவாயிற்று? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னையில் இன்று தண்ணீர் சூழ்ந்து உள்ளதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் மிக மோசமான நீர் மேலாண்மை தான் காரணம்.
2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்தளவுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் இல்லை. அதற்கு காரணம் முதல்-அமைச்சரின் சரியான வழிகாட்டுதலில் சிறப்பாக அதிகாரிகள் பணியாற்றுவது தான்.
நீதிபதி இடமாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டு வரும் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து இருப்பது வருத்தத்திற்கு உரியது. மிக சிறப்பாக நடுநிலையோடு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நல்ல தீர்ப்பை அளித்தவர் பானர்ஜி.
இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா தகில்வானயை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது வருத்தத்துக்குரிய செயல்.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் படகில் சென்றது ஆச்சரியப்படக்கூடியது இல்லை.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
கட்சி அலுவலகம் திறப்பு
முன்னதாக கோபியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். விழாவில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், கோபி நகர தலைவர் ஜாகீர் உசேன், நகர பொருளாளர் கன்சூல்ரகுமான் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்