மொடக்குறிச்சி அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 45). இவர் ஈரோட்டில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காஞ்சனா தேவி. இவர்களுடைய மகன் சிபிராஜ் (19).
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அருள்ராஜும், காஞ்சனாதேவியும் நிறுவனத்துக்கு சென்றுவிட்டனர். சிபிராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தார்.
கத்தியால் குத்திக்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சிபிராஜை அருள்ராஜ் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அருள்ராஜ் உடனே வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு சிபிராஜ் கழுத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சிபிராஜ் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தெரியவில்லை?. அவரது கொலை மர்மமாக உள்ளது.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிபிராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிபிராஜை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் கல்லூரி மாணவரை கொன்றவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.