தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐயில் படித்து ஒருவருட பணி அனுபவம் பெற்றவர்கள் தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐயில் படித்து ஒருவருட பணி அனுபவம் பெற்றவர்கள் தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்

Update: 2021-11-10 14:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.யில் படித்து ஒருவருட பணி அனுபவம் பெற்றவர்கள் தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க வருகிற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தனித்தேர்வர்கள்
2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வுக்கு தகுதியானவர்கள், தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் கலந்து கொள்ள ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ.யில் படித்து தேர்ச்சி பெற்று உள்ள முன்னாள் பயிற்சியாளர், தொழிற்பிரிவில் ஒரு வருட பணிஅனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறுவதற்காக தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற பிரிவுடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். 
ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். இதே போன்று விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும், தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஆகஸ்டு 2019-ம் ஆண்டில் எஸ்.சி.வி.டி. திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அந்த தொழிற்பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்று இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலை தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் 14.12.21 அன்றும், செய்முறைத் தேர்வு 15.12.21 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் விவரங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் தேர்வுகட்டணம் ரூ.200, செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22.11.2021-க்குள் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர், முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்