திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கந்தசஷ்டி திருவிழா
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் நடந்தது.
7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பாக தெய்வானை அம்பாள் எழுந்தருளினார்.
சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளி, தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் பட்டு ஆடைகள், மாலைகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமியும், அம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து ஐராவத மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பாக எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இன்றுமுதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாகவும் 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரமும், நேற்று நடந்த திருக்கல்யாணமும் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.