மதுபாட்டில்களுடன் சிக்கிய டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது
தேனியில் மதுபாட்டில்களுடன் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.;
தேனி:
சின்னமனூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). இவர், தேனி பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர், கையில் ஒரு கட்டை பையுடன் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்து வந்தார். அப்போது அங்கு ரோந்து வந்த தேனி போலீசார் சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த கட்டைபையை சோதனையிட்டனர்.
அதில் 140 மதுபான பாட்டில்கள் இருந்தன. அவற்றை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வாங்கிக் கொண்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.