ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் மாயம்

ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் மாயமானார்.

Update: 2021-11-10 11:34 GMT
உத்திரமேரூர்,

சென்னை அடையார் ராமசாமி கார்டனை சேர்ந்தவர் வனிதா (வயது 40). இவர் தனது குடும்பத்தனருடன் சில நாட்களுக்கு முன்பு இறந்த தனது தாயாரின் காரியத்திற்காக காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்துக்கு சென்றார்.

நேற்று மதியம் 1 மணி அளவில் அவரது மகன் சந்தோஷ் (19) நண்பர்களுடன் அருகிலுள்ள ஓடையில் குளிக்க சென்றார். அப்போது திடீரென வெள்ளம் அதிகமாகவே சந்தோஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

உடன் குளிக்க சென்ற நண்பர்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். கிராம மக்கள் ஓடைக்கு சென்று தேடி பார்த்தனர்.

மேலும் இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திலும் உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாலை 6 மணி வரை 1 கிலோ மீட்டருக்கும் மேலாக ஓடையில் சென்று தேடி பார்த்தனர்.

இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்தினர். பாட்டியின் காரியத்துக்கு சென்றபோது பேரன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது சம்பந்தமாக உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்