அடையாறு ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடல் - போலீசார் விசாரணை
சென்னை அடையாறு ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிக அளவில் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கி நிரம்பி உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறந்து விடப்பட்டதால் அடையாறு ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திரு.வி.க. பாலத்தின் கீழ், அடையாறு ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அங்கு சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அடையாறு போலீசார், மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் மிதந்து வந்த ஆண் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.