அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல்
அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கட்டிட மேஸ்திரி
நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவர் தனது நிலத்திற்கு அனுபவ சான்று தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து உள்ளார். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அனுபவ சான்று வழங்க வலியுறுத்தி நேற்று அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கட்டிட மேஸ்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுபவ சான்று வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.