தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 89390 78888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
சாலையை சீரமைப்பார்களா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பந்தல்குடியில் கிராமத்தில் உள்ள விநாயக நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகிறது. மேலும் விபத்துகளும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைப்பார்களா?
லட்சுமணன், பந்தல்குடி.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளிலும், வீடுகளின் முன்பும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
களஞ்சியராஜா, ராமநாதபுரம்.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கட்டிடம் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், அருப்புக்கோட்ைட.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
ஹரி, விரகனூர்.
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கரிசல்குளம் அம்பேத்கர் நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.
பரதன், ராஜபாளையம்.