கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கர்நாடக மேல்-சபை தேர்தல் குறித்து விவாதிக்க பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரு:
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மந்திரிகள் ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு, அஸ்வத் நாராயண், ஆர்.அசோக் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 25 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடக மேல்-சபை தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இணைந்து பாடுபட வேண்டும் என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்பு பா.ஜனதா மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் பிரச்சினைகள்
வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்துள்ளன. இதற்காக பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக பா.ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் உப்பள்ளியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 25 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக இடங்களை கைப்பற்ற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்திற்கு 9 பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கணேஷ் கார்னிக் கூறினார்.
இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.