குப்பைகள் அகற்றப்படுமா
தஞ்சை கீழவாசல் பகுதி சுண்ணாம்புக்காரத்தெருவில் உள்ள ரேஷன்கடை அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளை தேடி கால்நடைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, குவிந்து கிடக்கும் குப்பைகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழவாசல் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமுதவள்ளி தஞ்சாவூர்.
சாலை நடுவே பள்ளம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் திரவுபதி அம்மன் கோவில் தெரு சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிவவிடுகிறது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-பொதுமக்கள் பட்டுக்கோட்டை.
வேகத்தடை வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த ஊரணிபுரம் பகுதி பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி செல்லும் சாலையில் மருத்துவமனை, கடைவீதிகள், வங்கிகள் உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊரணிபுரம் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
ராமதுரை வெட்டுவாக்கோட்டை.