தொடர்மழையால் காய்கறிகள் விலை கடும் உயர்வு

தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.காய்கறிகள் விளைச்சலும் இல்லாததால் வரத்தும் குறைந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது

Update: 2021-11-09 20:51 GMT
தஞ்சாவூர்
தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.காய்கறிகள் விளைச்சலும் இல்லாததால் வரத்தும் குறைந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்காலிக மார்க்கெட்
தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம்.
மழையால் விளைச்சல் பாதிப்பு
தற்போது தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் மழைநீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக வரும் காய்கறிகளில் தற்போது 3-ல் 1 பங்கு காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
குறிப்பாக கத்திரிக்காய் தஞ்சையை அடுத்த சுவாமிமலை, அரியலூர்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும். இது தவிர வெளிமாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது எல்லா பகுதியிலும் மழை பெய்து வருவதால் கத்தரிக்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.120-க்கு விற்பனை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தரிக்காய் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் கேரட், தக்காளி விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. காய்கறிகளின் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (கிலோ கணக்கில்) வருமாறு:-
கத்தரிக்காய் ரூ.120, தக்காளி ரூ.70, கேரட் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.50, சின்னவெங்காயம் ரூ.60, பல்லாரி ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.35், பச்சைமிளகாய் ரூ.40, பீட்ரூட் ரூ.40, அவரைக்காய் ரூ.70, பீன்ஸ் ரூ.60, சவ்சவ் ரூ.30, சுரைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.50, புடலங்காய்ரூ.50.
அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து காய்கறிவியாபாரிகள் கூறுகையில், மழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்பதால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்