பட்டுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த கனமழை
பட்டுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த கன மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த கன மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பலத்த மழை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், என்ஜீனியர் குமார் ஆகியோர் நகரில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து மழை நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மதுக்கூர்
மதுக்கூர் பகுதியில் நேற்று காலை 6.30 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்கள், தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கி்றது. காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதித்துள்ளது.
அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளிகொண்டான், சேண்டாகோட்டை, தொக்காலிக்காடு, மாளியக்காடு, ராஜாமடம், பழஞ்சூர், தம்பிக்கோட்டை, மறவக்காடு, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மழை இடைவிடாது பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பஸ்களில் ஒருசில பயணிகளே பயணம் செய்தனர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வணிக வளாகங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அதிராம்பட்டினம் பகுதி ஊரடங்கு நடைமுறையில் உள்ளது போல் வெறிச்சோடி காட்சியளித்தது.