கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி

கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-11-09 19:40 GMT
தா.பழூர்:

சூரசம்ஹாரம்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் வில்லேந்தி வேலவருக்கும், உற்சவ மூர்த்தியாக விளங்கும் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 6-ம் நாளான நேற்று காலை வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியர் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூர சம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் விசாலாட்சி அம்மனிடம் போர்க்கோலத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க நடைபெற்றது. பக்தர்கள் முருகப்பெருமானை நோக்கி பல்வேறு பதிகங்களை பாராயணம் செய்தனர். சம்ஹார மூர்த்தியாக வீற்றிருந்த சுப்பிரமணியருக்கு சோடசோபச்சாரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் வாயிலில் நடந்த சூரசம்ஹாரத்தில் முதலில் கஜமுகாசூரனையும், அடுத்து சிங்கமுகாசூரனையும், இறுதியில் சூரபதுமனையும் வதம் செய்யும் நிகழ்ச்சி கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் குழுவினரால் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வில்லேந்தி வேலவருக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொண்டனர்.
உடையார்பாளையம்
இதேபோல் உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் உள்ள கோவிலில் பாலமுருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்தது. இதில் முருகப்பெருமான் பாலன் அலங்காரத்திலும், வேலன் அலங்காரத்திலும், வேடன் அலங்காரத்திலும், விருத்தன் அலங்காரத்திலும் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
நேற்று முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், பன்னீர், தேன், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் ராஜன் அலங்காரம் செய்யப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர்
அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கஜமுகசூரன், ஆடுதலைசூரன், சிங்கமுகசூரன், தரகாசூரன், பத்மசூரன், மயூராசூரன், சூரபத்மன் என ஏழு உருவங்களை தாங்கி வந்த சூரனை, ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான் வேல்கொண்டு அழித்து, ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சூரபத்மன் பல்வேறு உருவங்களில் வந்து முருகப்பெருமானுடன் போரிடும் காட்சி, முருகப்பெருமான் வதம் செய்ய வரும்போது சூரன் தப்பித்து ஓடிஒளிவது, சூரனை அழித்தபிறகும் மீண்டும் மாற்று உருவங்களை தாங்கி போரிட வருவது என்று போர் காட்சிகளை பக்தர்கள் தத்ரூபமாக செய்தனர். இந்நிகழ்ச்சியை குறைவான பக்தர்கள் அரோஹரா... கோஷத்துடன் கண்டு, முருகப்பெருமானை தரிசித்தனர். தொடர் மழை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்