திருப்பத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பத்தூர் முருகன்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-11-09 19:03 GMT
திருப்பத்தூர்,

கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பத்தூர் முருகன்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

கந்த சஷ்டி

திருப்பத்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து நேற்று மண்டபத்திலிருந்து முருகன், அம்பாள் சன்னதி முன்பு எழுந்தருளி வேல் வாங்கிக் கொண்டு சூரனை வதம் செய்ய  புறப்பாடு நடந்தது. முருகன் சூரனை வேலால் வதம் செய்தார். கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய வேலால் சம்ஹாரம் செய்தார். 
அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர் ஆடு, யானை, சிங்கம் என்று பல முகங்களில் உருமாறிய சூரனை, முருகன் தொடர்ந்து வேலால் வதம் செய்தார். இதனையடுத்து சூரன் சேவல், மயிலாக மாறி முருகனிடம் அடைக்கலமானார். தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் அதிகம் இன்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரான்மலை
 சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட மங்கைபாகர் தேனம்மை கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் சமேத வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து தரிசனம் செய்தனர். கொரோனா பரவல், தொடர் மழை காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்