ெதாடர் மழையால் 85 கண்மாய்கள் நிரம்பின

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 85 கண்மாய்கள் நிரம்பின. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்(புதன்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-11-09 18:59 GMT
சிவகங்கை 

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 85 கண்மாய்கள் நிரம்பின. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்(புதன்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

பலத்த மழை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவரமடைந்ததை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர்நிரம்பி மறுகால் செல்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இதனால் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அத்துடன் அதிக அளவில் குளிர்ந்த காற்று வீசியது.
சிவகங்கை நகரின் மைய பகுதியில் உள்ள தெப்பக்குளம் நிரம்பி முழு கொள்ளளவையும் எட்டியதால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெப்பகுளத்தில் யாரும் குளிக்க கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் உத்தரவின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மின் வினியோகத்தை சரி செய்தனர்.

85 கண்மாய்கள் நிரம்பின

தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் மணிமுத்தாறு வடிநிலக்கோட்டத்தில் ஏரியூர் பெரிய கண்மாய், எழுவனி கண்மாய், சொக்க நாராயணபேரி கண்மாய், அரளிக்கோட்டை பெரிய கண்மாய், செஞ்சை நாட்டார் கண்மாய் உள்ளிட்ட 85 கண்மாய்கள் நிரம்பி உள்ளன.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் உள்ளாட்சித்துறையை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிைடயே சிவகங்கை அடுத்த அரளிக்கோட்டை பெரிய கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருப்பதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு கண்மாய் கரை பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்றும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
 தொடர்மழை காரணமாக நேற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும்(புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்