முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு. அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருப்பத்தூர்
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ரூ.32 கோடி நலத்திட்ட உதவி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தென்காசி எஸ்.ஜவகர் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்று பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை, இலவச வீட்டுமனை பட்டா என 3,660 பயனாளிகளுக்கு ரூ.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
மகத்தான திட்டங்கள்
திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை அறிந்து அதனை நிறைவேற்றி வைப்பதற்கு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுவேன். மேலும் புதிய திட்டங்களை நிறைவேற்றவும், அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் இப்பகுதியில் அமைச்சர் இல்லாத காரணத்தால் அந்த பொறுப்பை முதல்-அமைச்சர் என்னிடம் ஒப்படைத்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நீங்கள் அமைச்சராக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.
உயிர் என்பது ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒன்றுதான். நோய்வாய் பட்டால் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். இதே சிகிச்சை ஏழைக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கலைஞர் காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தார். இதன்மூலம் ஏழை, எளியோரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிந்தது. தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி என பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு...
தமிழகத்தில் இன்னும் கொரோனா ஒழியவில்லை. கொரோனாவை ஒழிக்க முககவம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். புதிதாக பதவிக்கு வந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறுவுறுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த பகுதி. கடந்த 10 ஆண்டுகளாக 4 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்து காத்து இருந்தனர். தற்போது தமிழக முதல்-அமைச்சர், விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது முதலில் ஒரு லட்சம் விவசாயிகளுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டம் என்பதால் மாவட்டத்தில் திட்டப்பணிகளை நிறைவேற்றவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும் அரசு ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அமலு, மு.பெ.கிரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் (பொறுப்பு) பானு, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஜேலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் நன்றி கூறினார்.
அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆயவு கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிலுவையில்.உள்ளது குறித்தும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.. குறிப்பாக நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.தற்போது பெய்து வரும் மழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாக தயார் நிலையில் இருக்க வலியுறுத்த பட்டுள்ளது. விவசாயம் நிறைந்த மாவட்ம். இம்மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அரசின் பல்வேறு துறைகளை வர நடவடிக்கை எடுக்கப்படும். சின்னபள்ளிகுப்பம், மின்னூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தரப்படும். பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாணியம்பாடி- சேலம் 4வழிச்சாலை விரைந்து முடிக்கவும், திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.