மாடவீதியில் திருக்குடைகள் ஊர்வலம்

கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி மாடவீதியில் திருக்குடைகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-11-09 17:52 GMT
திருவண்ணாமலை

கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி மாடவீதியில் திருக்குடைகள் ஊர்வலம் நடந்தது.

கார்த்திகை தீபத்திருவிழா

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். 

வழக்கமாக திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

 அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்று திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படும். 

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அதுமட்டுமின்றி விழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டு கோவிலின் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது. 

கொடியேற்றம்

இந்தாண்டு தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு நாளை முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது.

குடைகள் ஊர்வலம்

 இந்தாண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் இன்று கோவிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது. முன்னதாக மாட வீதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற்றது. ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. 

இதில் தலைவர் ரவி, செயலாளர் ராஜகோபால் உள்பட நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்