புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

Update: 2021-11-09 17:45 GMT

சாலை அமைக்க வேண்டும்
ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்துக்கு செல்லும் வழி குண்டும்-குழியுமாக உள்ளது. இங்கு தனியார் பள்ளிக்கூடமும் உள்ளது. பத்திர பதிவுக்காக வருபவர்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வரும் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த பாதையில் செல்கின்றன. எனவே பதிவாளர் அலுவலக சாலையை விரைவாக தார் போட்டு தர வேண்டும்.
இளங்கோவன், ரங்கம்பாளையம்.


நகருக்குள் ஒரு முள் காடு

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ரங்கம்பாளையம் அருகே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 7 மற்றும் பகுதி 8 திட்டப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் முள் செடிகள் அதிக அளவில் வளர்ந்து காடு போன்று இருக்கிறது. பகுதி 7-ல் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு முன் செடிகள் சாலையில் வளர்ந்து கிடக்கின்றன. இங்கு புதர் மண்டி கிடப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக்கி சமூக விரோதிகள் மதுக்குடிக்கும் பகுதியாகவும், சூதாட்டம் நடத்தும் பகுதியாகவும் மாற்றி வருகிறார்கள். இது அங்கு குடியிருக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நகருக்குள் முள்காடாக இது மாறிவிடாமல், புதர்களை அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபா, ஈரோடு.


கோரிக்கை ஏற்பு 
ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி கிராமம் கருவேலம்பாளையத்தில் இரண்டு மின் கம்பங்கள் பழுதடைந்து கம்பிகள் தெரிய எலும்பு கூடாக காட்சி அளித்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதையடுத்து இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனால் பழுதடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நடப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

பழுதான கான்கிரீட் தளம் 
ஈரோடு மாநகராட்சி கிருஷ்ணம்பாளையம் காலனி  நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் மசிரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள வீதிக்கு செல்லும் வழியில்  கான்கிரீட் தளம் போடப்பட்டு உள்ளது. இந்த கான்கிரீட் தளம் பழுது அடைந்தும், உடைந்தும் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடிவதில்லை. நடந்து செல்பவர்களின் கால்கள், உடைந்த பகுதியில் பல தடவை மாட்டி காயம் அடைந்து உள்ளனர். இதை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கிருஷ்ணம்பாளையம் காலனி.

இடித்து அகற்ற வேண்டும்
 கோபி கணக்கம்பாளையம் பூஞ்சோலை பகுதியில் கைத்தறி துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கைத்தறி நெசவு நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித பணியும் நடைபெறாதால் கட்டிடம் பழுதடைந்து சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. தற்போது இந்த கட்டிடத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் விளையாடுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
பொதுமக்கள், கனக்கம்பாளையம்.


சாக்கடை தூர்வாரப்படுமா?
கோபி புதுப்பாளையம், பாரியூர் ரோடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கிய சாக்கடை கழிவுநீரில் கொசு  அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாக்கடையை தூர்வார நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், புதுப்பாளையம்.

பாராட்டு
அறச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் உள்ள ஒரு வீதியில் தெரு விளக்கு மேல் பார்த்தபடி இருந்ததால் அதன் ஒளி தெருவில் விழவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதையடுத்து தெருவிளக்கு சீர் செய்யப்பட்டது. எனவே இதுபற்றிய செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் எங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 
தர்சணா கோபிகா, நல்ல மங்காபாளையம்.

மேலும் செய்திகள்