திண்டிவனத்தில் துணிகரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.

Update: 2021-11-09 17:24 GMT
திண்டிவனம், 

பொருட்கள் சிதறிக்கிடந்தன

திண்டிவனம் மகாத்மாகாந்தி நகர் அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 42). இவர் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சுந்தர்ராஜன் வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் இல்ல பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றார். பின்னர் அவர், விழா முடிந்ததும் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன.

நகை-பணம் கொள்ளை

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. சுந்தர்ராஜன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்