நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம்
காவிரியில் நீர் அதிகமாக வருவதால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.;
ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்கு வரத்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளதாலும் காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வருவாய்த்துறையினர் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்க படகுத்துறை ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர். மறு உத்தரவு வரும் வரை படகு போக்குவரத்து இயக்கங்காது என பேரூராட்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்று கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
------