10 ஆயிரம் போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திருச்சி மத்திய மண்டலம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் அடங்கிய மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திருச்சி மத்திய மண்டலம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் அடங்கிய மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆய்வு
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று நாகைக்கு வந்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தயார் நிலையில்...
தஞ்சை சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மழை உள்ளிட்ட பேரிடரின்போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற கடந்த கால புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 42 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.. அவர்களுடன் பொக்லின் எந்திரம், மரம் வெட்டும் எந்திரங்கள், மீட்பு படகுகள் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் உள்ளன.கடலோர பகுதிகளில் மீனவர்களை சந்தித்து பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
பேரிடர் மீட்பு குழு
திருச்சி மத்திய மண்டலம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 10 ஆயிரம் போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.
பருவமழை குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மாவட்ட சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.