குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது
நாகையில் வெளுத்து வாங்கும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
நாகப்பட்டினம்:
நாகையில் வெளுத்து வாங்கும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, வெளுத்து வாங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விடிய, விடிய சாரல் மழை பெய்தது. நாகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலை சாரல் மழையாக பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு, சிவசக்தி நகர், நாகை நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
50 ஆயிரம் மீனவர்கள்
நகரின் முக்கிய சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீரில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர். குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் வாளியை கொண்டு இறைத்து வெளியே ஊற்றினர்.
மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் வடிய வழியின்றி உள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்
வேதாரண்யம், கோடிக்கரை அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, செம்போடை, கரியாப்பட்டினம், மருதூர், வாய்மேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதாரண்யம் தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை.
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
ஆற்றின் கரை அரிப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி மானாம்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமலைராஜன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீரில் செல்கிறது. இதனால் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் இருந்தது.
உடனடியாக அதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
சீரமைக்கும் பணி தீவிரம்
இதை தொடர்ந்து திருமருகல் உதவி பொறியாளர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறையினர் கரை அரிப்பை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கம்பங்கள் சாய்ந்தன
வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மஞ்சள் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. அதனை உடனடியாக ஊராட்சி மன்றம் சார்பில் சரி செய்யப்பட்டது. கொண்டாங்காடு பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தன. உடனே மின்சாரத் துறை பணியாளர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதேபோல மருதூர் ஊராட்சி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன. வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் 15 அடிக்கும் ஆழமாக உள்ள தரை மட்ட கிணறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.மேலும் ஏரி, குளங்கள் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
மழை அளவு
நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-
வேதாரண்யம் 149, தலைஞாயிறு 112, திருப்பூண்டி 91, நாகை 14.4,