நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் கூறினார்.

Update: 2021-11-09 15:50 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். பொருளியல் மற்றும் புள்ளியத்துறை ஆணையாளரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
இயற்கை பேரிடர்களை தவிர்க்க திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறைகள் மூலமாக பேரிடர் காலத்தில் இணைந்து செயலாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து நீர்வழிப்பாதைகள், கால்வாய்கள், கன்மாய்கள் ஆகியவற்றில் முட்புதர்கள், குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும். வெள்ளத்தில் பாதிக்கும் கால்நடைகள், பொதுமக்கள் அனைவரையும் மீட்க மீட்புக்குழு தயாராக இருக்க வேண்டும்.
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு
காற்றால் மரங்கள் விழுந்தால் வெட்டி அகற்ற தயராக இருக்க வேண்டும். நீர்நிலைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பினர் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சரி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் நோய் பரவாமல் தடுக்க பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு போன்ற கிருமிநாசினிகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்