நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை

கடலூர் மாவட்டத்துக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Update: 2021-11-09 15:03 GMT
கடலூர், 

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் மழைநீர் அகற்றும் பணி மற்றும் தூய்மை பணிகளை நேற்று கடலூர் டவுன்ஹாலில் இருந்துமாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற 10 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 9 குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் 45 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீரை வடிய வைக்கும் பணியை தொடங்கினர். 

ஆய்வு

தொடர்ந்து வில்வநகர் பெருமாள் குட்டையில் தேங்கி உள்ள நீரை குடியிருப்பு பகுதிகளை பாதிக்காதவாறு மோட்டார் மூலம் வெளியேற்று வதையும், காமராஜர் பகுதியில் தேங்கி இருந்த மழைநீரை மோட்டார் மூலம் வடிய வைக்கும் பணியையும் கலெக்டர், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

45 பேர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாநகராட்சியில் தேங்கி உள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதற்கும், தூய்மை பணிகளில் ஈடுபடுவதற்கும் 10 பொக்லைன் எந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 45 பேர் குழுவாக பிரிந்து பணியில் ஈடுபடுவார்கள்.
13 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளிலும், ஆற்றின் கரையோர பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏரிகள் நிரம்பின

கடலூர் மாவட்டத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆறுகள், நீர்த்தேக்கங்களில் பாதுகாப்பான முறையில் தான் தண்ணீரை தேக்கி வைத்துள்ளோம். எங்கும் ஆபத்தான நிலையில் இல்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
 பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 228 ஏரிகள் உள்ளன. அவற்றில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 164 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் நீர் உள்ளது. நிரம்பிய ஏரிகளில் உள்ள கரைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கண்காணிக்க நடவடிக்கை

வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏரிகளில் குறைந்த அளவிலான தண்ணீர் தான் வெளியேற்றி வருகிறோம். கீழ் பரவனாறு பகுதியில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
மாவட்டத்தில் 278 மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளையும் கண்காணிக்க கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
அப்போது மண்டல இயக்குனர் (நகராட்சி நிர்வாகம்) சரவணன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி, தாசில்தார் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக்பாபு, நகர செயலாளர் ராஜா, மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி.பெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்