மீனவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-11-09 14:53 GMT
கடலூர், 

புதுச்சேரி பூரணாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் சுப்பிரமணியன் (வயது 40) மீனவர். இவர் கடலூர் துறைமுகம் சொத்திக்குப்பத்தில் உள்ள தனது மாமனார் வேலாயுதம் என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 24.8.2017 அன்று அவர் நொச்சிக்காட்டில் பாபு மனைவி மலர்க்கொடிக்கு சொந்தமான பூவரசு மரத்தில் உள்ள கிளைகளை வெட்டினார். இதை பார்த்த மலர்க்கொடி அவரிடம் ஏன் எங்களுக்கு சொந்தமான மரத்தை வெட்டுகிறீர்கள் என்று கேட்டார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், மலர்க் கொடியை ஆபாசமாக பேசி மரக்கட்டையால் தாக்கினார். பின்னர் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் அவரது முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

சுய நினைவு திரும்பியது

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவு இன்றி கிடந்த மலர்க்கொடியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவருக்கு சுய நினைவு திரும்பியது. இது பற்றி பாபு கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.

7 ஆண்டு சிறை

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சுப்பிரமணியன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்