ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டரிடம் 6½ லட்சம் மோசடி
கோவை
செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக கூறி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த மோசடி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 61). இவர் கோவை ஆயுதப்படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரு டைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு தகவல் வந்தது.
அதில் செல்போன் டவர் அமைக்க இடம் அளித்தால் மாதந்தோறும் வாடகை பணம் தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதை உண்மை என்று நம்பிய அமானுல்லா அந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
ரூ.6½ லட்சம் முன்பணம்
அதில் எதிரே பேசிய நபர், செல்போன் டவர் அமைக்க இடம் அளித்தால் முன்பணமாக ரூ.30 லட்சமும், மாதம் தோறும் வாடகை யாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும்.
ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 750-ஐ தான் கூறும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதை நம்பிய அமானுல்லா, அந்த மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 750-ஐ செலுத்தினார்.
அதன் பிறகு செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக எந்தவித தகவலும் இல்லை. இதனால் அவர், அந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச்-ஆப் என்று வந்தது.
3 பேர் மீது வழக்கு
அதன்பிறகு பல முறை முயன்றும் அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அமானுல்லாவிடம் மோசடி செய்தது சுஜித் குமார், பூனம் தேவி, கரன்தீப்சிங் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.