முல்லைப்பெரியாறு அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தி.மு.க. அரசால் குந்தகம் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தி.மு.க. அரசால் குந்தகம் ஏற்பட்டுள்ளதாக கம்பத்தில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

Update: 2021-11-09 13:41 GMT
தேனி:
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
2001-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்புக்காக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று சொன்னதோ அதையெல்லாம் பல கோடி ரூபாய் செலவழித்து செய்து முடித்தார். பின்னர் கேரள அரசை அணுகி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பலமுறை அனுமதி கேட்டும் கேரள அரசு மறுத்தது. இந்த பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜெயலலிதா எடுத்து சென்று வாதாடி, போராடினார்.
சட்ட திருத்தம்
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அணையில் பல கட்டங்களாக தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வை தொடர்ந்து, இந்த அணை எந்த காலகட்டத்திலும், எந்த சேதமும் இல்லாமல் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பலமாக இருக்கும் என்று ஆய்வு அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்திவிட்டு முழு கொள்ளளவான 152 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. கேரள அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியது. ஏற்கனவே கேரள அரசு 2003-ம் ஆண்டு நீர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி இருந்தது. 2006-ம் ஆண்டு அந்த சட்டத்தை திருத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி தான் என திருத்தம் செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். பின்னர் தேர்தல் வந்துவிட்டது. 2006-ல் நம்முடைய கெட்ட நேரம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 5 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி செய்ததோடு மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியது. அப்போது முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கை துரிதப்படுத்த முயற்சி செய்யவில்லை. ஜெயலலிதா பெற்றுத் தந்த தீர்ப்பை அமல்படுத்தவும் தி.மு.க. அரசு முயற்சி செய்யவில்லை.
நிலையான தீர்ப்பு
2011-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சரான பிறகு சுப்ரீம் கோர்ட்டை நாடினார். 2013-ம் ஆண்டு பூகம்பத்தால் முல்லைப்பெரியாறு அணை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கேரள அரசு சில சந்தேகங்களை எழுப்பியது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தொழில்நுட்ப வல்லுனர் குழுவை அனுப்பி அணையில் ஆய்வு செய்தது. அந்த குழுவினர் ஆய்வு செய்த பின்பு, பூகம்பம் ஏற்பட்டாலும் இந்த அணை உடையாது என அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நிலையான ஒரு தீர்ப்பை வழங்கியது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்தார்.
அதன்படி பேபி அணையை பலப்படுத்த ரூ.6½ கோடி ஒதுக்கப்பட்டது. நான் தான் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர். ஒப்பந்தம் போடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலமாக இந்த பணிக்காக மணல், ஜல்லி, கம்பிகள் போன்றவை வல்லக்கடவு வழியாக அணைக்கு கொண்டு சென்று குவிக்கப்பட்டது. பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை அகற்றினால் தான் அந்த அணையை பழுதுநீக்கம் செய்ய முடியும். அந்த மரங்களை அகற்ற அனுமதி வழங்க பலமுறை கேரள அரசிடம் ஜெயலலிதா கேட்டு பார்த்தார். ஆனால் கேரள அரசு அனுமதி தர மறுத்தது.
இருப்பினும் தீர்ப்பை அமல்படுத்தி 3 முறை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.
துரைமுருகன் சப்பைக்கட்டு
ஆனால் இன்றைக்கு நீர்மட்டம் 138.50 அடியாக வரும்போது அவர்களாகவே கேரளாவுக்கு தண்ணீரை திறந்து கொண்டார்கள். அணையை பராமரிக்கவும், திறக்கவும் முழு அதிகாரம் தமிழகத்துக்கு தான் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அதற்கு மேல் வந்த தண்ணீர் உபரிநீராக கேரளாவுக்கு திறக்கப்பட்டது. இது தான் வரலாறு. அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு இன்றைக்கு ஆளும் தி.மு.க. அரசால் குந்தகம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு அமைச்சர் துரைமுருகன் இப்போது ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அது சப்பைக்கட்டு. ஜெயலலிதா மட்டும் எப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கினார்?. இதற்கு ஆளும் தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து பொய் கணக்குகளை சொல்லி வருகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.
போராட்டம் ஓயாது
இப்போது நாம் நமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால் அடுத்த ஆண்டு 136 அடி வரை தண்ணீர் தேக்கினால் போதும் என்பார்கள். ஒருபோதும் இதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோக ஒருபோதும் அ.தி.மு.க. அனுமதிக்காது. இந்த நிலை நீடித்தால் தென்மாவட்டங்களில் இருக்கும் அத்தனை விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மிகப்பெரிய அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் நீரை குறைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நமது உரிமைகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். மதிப்பளிக்க தவறினால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். நாம் பெற்ற உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
நாம் போராடி கேட்டும் பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இன்றைக்கு கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அனுமதி கொடுத்தது உண்மையா? பொய்யா? என தெரியவில்லை. அனுமதியை ரத்து செய்ததாக கேரள அரசு கூறுகிறது. ஆக, மு.க.ஸ்டாலின் தெரிவித்த நன்றி காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நிலையான, உறுதியான தீர்ப்பை பெற்று தருகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. தீர்வு எட்டும் வரை இந்த போராட்டம் ஓயாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரவீந்திரநாத் எம்.பி.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன், முன்னாள் எம்.பி. பார்த்திபன், கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்தபோது மழை பெய்தது. மழைக்கு குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், கேரள அரசை கண்டித்தும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

=========
(இன்சைடு பாக்ஸ்)
===============
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ. மயக்கம்
கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு அருகில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. மயங்கி கீழே சரிய இருந்த நிலையில் அருகில் நின்ற நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்தனர். பின்னர், அவரை கைத்தாங்கலாக ஆர்ப்பாட்ட மேடையின் ஒரு ஓரமாக அழைத்து சென்று அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்துக்கு பிறகு மயக்கம் தெளிந்து அவர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததால் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையில் அவர் சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டதாகவும் அ.தி.மு.க.வினர் தரப்பில் கூறப்பட்டது.



மேலும் செய்திகள்