சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்துக்கு துரோகம் செய்த தி.மு.க. அரசு
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியை எட்டுவதற்கு முன்பு தண்ணீர் திறந்திருப்பதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்துக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றம் சாட்டினார்.
நிலக்கோட்டை:
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கினார். எஸ்.தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், மோகன், நல்லதம்பி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 33 ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதன்படி 4 முறை, 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
ஆனால் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவை, 138 அடியாக தி.மு.க. அரசு குறைத்து விட்டது. இதனால் முல்லைப் பெரியாறு அணையை நம்பி உள்ள 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும்.
தமிழர்களின் வாழ்வாதாரம்
இதேபோல் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், கேரள அரசு தண்ணீரை திறந்து விட்டு வீணாக கடலில் கலக்க செய்கிறது. இந்த பிரச்சினையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைச்சர் துரைமுருகன் பேசி வருகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் தமிழர்களுடைய வாழ்வுரிமை, ஜீவாதாரம், அடிப்படை உரிமை பறிபோய்விடும். இலங்கை தமிழர்கள், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்பன உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது அ.தி.மு.க. தான்.
காவிரியை கர்நாடகத்துக்கும், பாலாறை ஆந்திராவுக்கும் தி.மு.க.வினர் விட்டு கொடுத்து விடுவார்கள்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவை தட்டி கேட்க மாட்டார்கள்.
பிறமாநில அரசுகளின் தயவு
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில், தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்களின் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் தயவு தேவைப்படுகிறது. இதனால் தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து, தட்டி கேட்பதை தவிர்க்கிறது தி.மு.க. அரசு.
பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவதற்காக, கேரள அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். ஆனால் உடனடியாக கேரள அரசு அனுமதியை ரத்து செய்துவிட்டார்கள். இதற்காக தி.மு.க.வினர் ஏன் போராடவில்லை.
142 அடியை எட்டுவதற்கு முன்பே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக அதிகாரிகள் தான் தண்ணீர் திறந்து விட்டார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறுவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?.
பச்சை துரோகம்
தண்ணீரை திறந்து விட்டு, கேரள அரசுக்கு துணை போகிறார்களா?. இது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் செய்யும் பச்சை துரோகம். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு கையாண்ட விதம் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் எம்.பி. உதயகுமார் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், நத்தம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் விஜய பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவர் சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் புரட்சிமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர்கள் நெப்போலியன், சரவணன், நகர பொருளாளர் சரவணகுமார், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணை செயலாளர் சிமியோன் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்தபோது சாரல்மழை பெய்து கொண்டிருந்தது. அதனை பொருட்படுத்தாமல் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.