பூட்டிகிடக்கும் கழிவறையால் பயணிகள் அவதி
பூட்டிகிடக்கும் கழிவறையால் பயணிகள் அவதி
தாராபுரம்
தாராபுரம் பஸ் நிலையத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. திருப்பூா், கோவை, ஈரோடு, கரூா் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்பட பல்வேறு தென்மாவட்டங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனா். இந்த நிலையில் பயணிகள் பயன்பாட்டுக்கு தாராபுரம் பஸ் நிலைய நுழைவு பகுதியில் ஆண், பெண் இலவச கழிவறை கட்டப்பட்டு உள்ளது. இதை பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் அந்த கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என துண்டு சீட்டில் எழுதி கதவில் ஒட்டப்பட்டு பல மாதக்கணக்காகிறது. ஆனால் பணிகள் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
இதனால் கழிவறையை சுற்றிலும் பஸ் பயணிகள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் பயணிகள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். எனவே அவற்றை பயன்படுத்த பயணிகள், கடைக்காரா்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு பலமுறை புகாா் தொிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ்நிலைய கழிவறைகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி பயணிகளின் கோாிக்கையாக உள்ளது