முத்தூர்,
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பம்பாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் தாராபுரம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் டாக்டர் சக்திவேல் பாண்டியன் மேற்பார்வையில் மூத்தாம்பாளையம் அரசு கால்நடை மருத்துவர் தமிழ்செல்வன், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் பிரியா தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர் 4 மாதங்களுக்கு மேல் உள்ள காங்கேயம், சிந்து, ஜெர்சி இன பசுமாடுகள், சினை மாடுகள், கன்றுகள், காளைகள் ஆகிய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இம்முகாமில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 150 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மோகன்ராஜ் மற்றும் கால்நடை வளர்ப்போர், சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
==========