தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாத விவசாய பணிக்கு மட்டும் 5 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாத விவசாய பணிக்கு மட்டும் 5 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாத விவசாய பணிக்கு மட்டும் 5 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வு
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு யூரியா உரம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த யூரியா உரம் இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீரென ஸ்பிக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, உதவி கலெக்டர் ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம் மற்றும் ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன், பொது மேலாளர் செந்தில்நாயகம், உதவி இயக்குநர் கண்ணன், தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
யூரியா
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பயிர் சாகுபடிக்கு முக்கியமாக தளைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து தேவைப்படுகிறது. தளைச்சத்து முக்கியமான ஒன்றாகும். தளைச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உரம்தான் யூரியா உரமாகும்.
இந்த யூரியா உரத்தில் 46 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. யூரியா உரத்தை ஸ்பிக் நிறுவனமானது வருடத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் மத்திய அரசால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் தமிழ்நாட்டுக்கு 60 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்படுகிறது. மேற்படி மாவட்டங்களுக்கு வழங்கப்படும் உரங்கள் ஸ்பிக் நிறுவன முகவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
3 ஆயிரம் டன்
ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டன் உரம் தானியங்கி எந்திரம் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. துரிதமாக செயல்படுவதற்கு இந்த நிறுவனத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து உள்ளோம். இந்த நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்கள் உள்ளனர். மேலும் பணியாளர்கள் தேவையென்றால் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் மானாவாரி பயிரான சோளம், கம்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு உள்ளன. ராபி பருவத்துக்கு மட்டும் 12 ஆயிரத்து 500 டன் யூரியா தேவைப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் 5 ஆயிரம் டன் யூரியா தேவைப்படும். தற்போது போதுமான அளவு யூரியா உரம் கிடைத்து வருகிறது. தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் யூரியா 33 ஆயிரம் டன்கள், டிஏபி 8250 மெட்ரிக் டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் 9610 மெட்ரிக் டன்கள் நடப்பு நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.