சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றம்; மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் கனமழையால் சுரங்கப்பாதைகளில் தேங்கி நின்ற மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
மழைநீர் தேக்கம்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முக்கிய சுரங்கப்பாதைகளான வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி ஆகியவற்றில் மழைநீர் சூழ்ந்ததால் அந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தை மாற்றி போலீசார் அறிவித்தனர். சில சாலைகளில் பள்ளங்கள் இருந்ததால் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் 16 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. இந்த சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராட்சத மோட்டார்
மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் மழைநீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். மழைநீரை வெளியேற்ற அதிக குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு சுரங்கப்பாதையில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டது.
கணேசபுரம், மேட்லி, ரங்கராஜபுரம் சுரங்கபாதைகளில் இருந்த மழைநீர் நேற்று முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. இதையடுத்து அந்த சுரங்கப்பாதைகள் வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் மழைநீர் தேங்கிய 16 சுரங்கப்பாதைகளில் 14 இடங்களில் தேங்கி இருந்த மழைநீரை ராட்சத மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டதால் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு அனைத்தும் சரி செய்யப்பட்டது.