‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-09 05:21 GMT
வடியாத வெள்ளநீரால் வாடும் மக்கள்



சென்னையில் ஒரே நாளில் பெய்த 23 செ.மீ. மழையால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. குடியிருப்பு பகுதிகளிலும் மழைவெள்ளம் புகுந்து மக்களின் நிம்மதியை முற்றிலும் சீர்குலைத்து உள்ளது. மழைவெள்ள பாதிப்பு பொதுமக்களை சொல்லொணத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மழைவெள்ள நீர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தாலும், கொரட்டூர், ராயபுரம், புளியந்தோப்பு, வடபெரும்பாக்கம் போன்ற பல இடங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தொடர்ந்து குளம் போல் தேங்கி இருக்கிறது. வடியாத மழைநீரால் மக்கள் வாடி போய் உள்ளனர். இயல்பு வாழ்க்கை இருட்டாகி உள்ளது. எனவே மழைநீர் வடியாத பகுதிகளை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.

மின் இணைப்பு பெட்டி ஆய்வு செய்யப்படுமா?



சென்னை சைதாப்பேட்டை 139-வது வட்டம் கட்டபொம்மன் பிளாக் கிண்டி ரத்தினம் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியின் வெளியே வயர்கள் தெரிகின்றன. குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி ஆகும். எனவே இந்த மின் இணைப்பு பெட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரகுராம், சைதாப்பேட்டை.

மழைநீர் கால்வாய் சேதம்

சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் முதல் பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் உடைந்து திறந்த நிலையில் இருக்கிறது. இதில் தேவையற்ற கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால் மழைநீர் வெளியேறி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த இடம் கொசுக்கள் உற்பத்தி கூடாரம் போன்று உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?

க.முத்து, சுந்தரம் பிள்ளை நகர்.

பூங்காவை சூழ்ந்த மழைநீர்

சென்னை அண்ணா நகர் கிழக்கு 6-வது அவென்யூவில் உள்ள போகன் வில்லா பூங்கா மழைவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இங்கு மழைவெள்ளம் வெளியேற வழியில்லாமல் இருக்கிறது. இதனால் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கருவிகள், சிறுவர்கள் விளையாடும் சாதனங்கள் துருபிடித்து வீணாகிவிடும் நிலை இருக்கிறது. எனவே மோட்டார் பம்புகள் மூலம் மழைவெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணி வின்சென்ட், அண்ணாநகர்.

தெருநாய்கள் தொல்லை

தாம்பரம் சேலையூர் கற்பகம் நகர் 2 மற்றும் 3-வது தெருக்களில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் சுதந்திரமாக சாலையில் நடமாட முடியவில்லை. சில நாய்கள் துரத்துகின்றன. இரவு நேரத்திலும் குறைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சுதர்ஷன், சேலையூர்.

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?



திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சரஸ்வதிநகர் விரிவாக்கம் முத்தமிழ் நகர் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. குண்டும்-குழியுமாகவும், மேடு-பள்ளங்களாகவும் உள்ளது. இந்த சாலையில் பயணிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த சாலையை செப்பனிட்டு தந்தால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி, நிம்மதி அடைவோம்.

- கோகுல கிருஷ்ணன், திருநின்றவூர்.

சகதி காடான தெரு

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி 6-வது வார்டு பசும்பொன் நகர் விரிவு கவுதமன் தெரு கனமழையால் சகதி காடாக மாறி உள்ளது. சாலையில் கற்களும் சிதறி கிடக்கின்றன. இதனால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறோம். தற்போது மழை காலம் என்பதால் தற்காலிக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். மழை காலம் முடிந்தவுடன் நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

-பசும்பொன் நகர் விரிவு குடியிருப்போர் பொதுநலச்சங்கம்.

வாகன ஓட்டிகளுக்கு சவாலான சாலை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் மணல்மேடை சாலை வாகன ஓட்டிகளுக்கு சவாலான சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு, முரடாகவும் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பது சாகச பயணம் செய்வது போன்று உள்ளது.

- உதயகுமார், வாகன ஓட்டி.

வயல்வெளியில் வலுவிழந்த மின்கம்பம்



திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகை கிராமம் சோத்துப்பாக்கம் பஞ்சாயத்து தாமரைப்பாக்கம் கூட்டுரோடு கட்டாங்கள் என்னும் பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் வலுவிழந்து உள்ளது. மின்கம்பத்தின் மேற்பகுதி உடைந்து இருக்கிறது. தினமும் விவசாயிகள் வேலை செய்யும் இடம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.கண்ணன், அகரம் கண்டிகை.

சாலையை சீரமைக்காதது ஏன்?

காஞ்சீபுரம் வழியாக வாலாஜாபாத்-ஒரகடம் செல்லும் முக்கிய சாலையில் நசரத்பேட்டை, முத்தியால்பேட்டை போன்ற சாலைகள் உரிய பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கலெக்டரில் தொடங்கி உயர் அதிகாரிகள் சென்று வரும் இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை

- ப.கவிமதன், அய்யன்பேட்டை.

மேலும் செய்திகள்