கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ.வின் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ஐ நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ததை தொழிலாளர்கள் கணக்கில் சேர்த்திட வேண்டும். கடந்த வருடங்களிலும், தற்போதும் செலுத்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகையை கணக்கில் செலுத்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காத்திருப்பு போராட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.